துறைமுக பொறுப்புக் கழகத்தின் வைப்பு நிதி ரூ.100 கோடி மோசடி: சிபிஐயின் அதிரடி நடவடிக்கையில் 9 பேர் சிக்கினர்

by Admin / 11-08-2021 12:39:40pm
துறைமுக பொறுப்புக் கழகத்தின் வைப்பு நிதி ரூ.100 கோடி மோசடி: சிபிஐயின் அதிரடி நடவடிக்கையில் 9 பேர் சிக்கினர்

சென்னை துறைமுக பொறுப்பு கழகத்துக்கு சொந்தமான நிரந்தர முதலீட்டிலிருந்து 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 9 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு துறைமுக பொறுப்புக் கழகம் மூலம் கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் 500 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. ஆனால் 3 நாட்களுக்கு
 
பின் அதே இந்தியன் வங்கிக்கு சென்ற ஒருவர், துறைமுக பொறுப்பு கழகத்தின் துணை இயக்குனர் என அறிமுகம் செய்து கொண்டு, அதற்கான போலி ஆவணங்களுடன் வைப்பு நிதியிலிருந்து 100 கோடி ரூபாயை இரு வேறு வங்கி கணக்குகளுக்கு தலா 50 கோடியை பரிமாற்றம் செய்துள்ளார்.

அதன்பின் அவர் தரகர் மணிமொழி என்பவருடன் சேர்ந்து 50 கோடியை 28 வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அவரது செயல்பாடு மீது சந்தேகம் அடைந்த இந்தியன் வங்கி அதிகாரிகள், மீண்டும் அந்த நபர் பணபரிமாற்றம் செய்ய முயன்றபோது, போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். மேலும் இதில் இந்தியன் வங்கியும் சம்பந்தப்பட்டிருந்ததால், சிபிஐ-ல் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய போலீசார், மோசடியை உறுதிசெய்து 9 பேரை கைது செய்துள்ளனர்.  திருநெல்வேலியில் கைதான சுடலைமுத்துவை  சென்னை அழைத்து வரும் பணியில் சி.பி.ஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த மோசடியில் துறைமுக அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் யார் யாருக்கு தொடர்புள்ளது  என்ற கோணத்தில் விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via