சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது.

by Editor / 27-03-2023 11:08:48am
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது.

உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த ஜனவரி 14-ம் தேதி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

இதேபோன்று ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம்  நடைபெற்றது.கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி பம்பையில் நடைபெறும். அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.

இந்த பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via