சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

by Editor / 11-07-2024 10:17:16pm
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தமிழகத்தில் சிவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம்  தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்வை ஆடித்தபசு திருவிழாவாக  கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்திற்கு கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.   மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதிபராதனையுடன்  அடித்தபசுதிருவிழா துவங்கியது. 

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொடியேற்றும் நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் அறங்காவலர் குழுவினர், இந்து அறநிலை துறை அதிகாரிகள் உட்பட தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via