ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது-பாஜக பெண் நிர்வாகிக்கு வலைவீச்சு.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து, மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக வழக்கறிஞர் அருள் உள்பட 11 பேர் கைதாகினர். இவர்களை 5 நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ரவுடி திருவேங்கடம் காவல்துறையினரை தாக்கி தப்பி செல்ல முயன்றதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கைதானவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்பேரில், 6 பேரை அழைத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு அளிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை தொடர்பாக, ஏற்கனவே கைதான வழக்கறிஞர் அருள் என்பவருடன் தொடர்பில் இருந்ததாக வழக்கறிஞரும், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக துணை செயலாளருமான மலர்கொடி மற்றும் ஹரிஹரனிடம் நாள் முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து இருவரையும் செம்பியம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அருள், மலர்க்கொடிக்கு இடையே லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதான வழக்கறிஞர் மலர்கொடி பிரபல ரவுடியான, தோட்டம் சேகரின் மனைவி ஆவார். அருளுக்கும்-மலர்கொடிக்கும் இடையே லட்சக்கணக்கில் பணம் பரிவர்த்தனை நடந்தது மட்டுமின்றி, மலர்கொடி மூலமாக அருளுக்கு நாட்டு வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் என்பவரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். இதன்மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தோழியும் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது















.jpg)



