மாறு வேடத்தில் சென்று ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த டி.எஸ்.பி.

by Editor / 20-07-2024 08:55:34am
மாறு வேடத்தில் சென்று ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த டி.எஸ்.பி.

கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சிஅலுவலகத்தில் இளநிலை பொறியாளராக சேம் செல்வராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கிள்ளியூர், உண்ணாமலைக்கடை, நல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் நடைபெறும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பில் பாஸ் பண்ண லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் இளநிலை பொறியாளரை பொறிவைத்து பிடிக்க தயாரானார்கள். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏ.டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான டீம் இன்று களம் இறங்கியது. அதற்காக ரசாயன பவுடர் பூசப்பட்ட பணத்துடன் ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்சம் கேட்ட இளநிலை பொறியாளரிடம் சென்றார். அவருடன் கான்ட்ராக்டர் போன்று மாறுவேடத்தில் ஏ.டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜ் சென்றுள்ளார்.  அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த இளநிலை பொறியாளர் சாம் செல்வராஜிடம் ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.

இளநிலை பொறியாளர் சாம் செல்வராஜ் பணத்தை வாங்கும்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த ஏ.டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜ் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வேகமாக செயல்பட்டு அவரை கையும்களவுமாக பிடித்தனர். இளநிலை பொறியாளரை சோதனை செய்தபோது அவரது பேன்ட் பாக்கெட், மணிபர்ஸ் ஆகிய இடங்களில் கட்டு கட்டாக பணம் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இளநிலை பொறியாளரின் காரை போலீசார் சோதனை செய்தபோது காரில் ஒரு பையிலும் பின்பக்க  டிக்கியில் கோப்புகளுக்கு இடையேயும் கணக்கில் வராத லஞ்சப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.  அதன்படி, இளநிலை பொறியாளரின் மணி பர்ஸ்ஸில் இருந்து சுமார் ரூ.20,000, அவருடைய காரில் இருந்து 4 லட்சத்து3 ஆயிரம் ரூபாயும், உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக ஊழியரிடம் இருந்து 9,500 ரூபாயும், நான்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒரு லட்சத்துஆயிரத்து 500ரூபாய் என மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பறிமுதல் செய்து லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளர் சாம் செல்வராஜ், அவரது உதவியாளர் ஹரிஹரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிலும், உதவி செயற்பொறியாளர் பல நாட்கள் விடுப்பில் இருந்து விட்டு  பணிக்கு  சேர்ந்து ஒருசில நாட்கள் ஆன நிலையில்  ஒப்பந்ததாரர்கள் தாங்கள் செய்த ஒப்பந்த பணிக்கு பில் எழுதுவதற்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜ் கான்ட்ராக்டர் வேடத்தில் சென்று கரன்சி வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் குமரியில் பெரும்பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

Tags : மாறு வேடத்தில் சென்று ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த டி.எஸ்.பி.

Share via