பாஜக மாவட்ட துணை தலைவர் மகன் உள்பட 4 பேர் கைது - காவல் நிலைய ஜாமீனில் விடுவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரை பொறுத்தவரை தீப்பெட்டி தொழில் பிரதான தொழிலாளாக இருந்து வருகிறது. இதனை நம்பி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கோவில்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிக்கு நல்ல கிராக்கி உண்டு. குறிப்பாக கோவில்பட்டியில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பிராண்ட் தீப்பெட்டிகள் உலகம் முழுவதும் நல்ல பெயரை பெற்றுள்ளது. குறிப்பாக பல்வேறு உற்பத்தியாளர்கள் தீப்பெட்டி தயாரித்தாலும் ஒவ்வொரு பிராண்டிற்கும் நல்ல மதிப்பு உண்டு...
அந்த வகையில் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் சிட்கோ தொழிற்பேட்டையில் ஓம் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் வினோத்பிரபாகரன் என்பவர் தீப்பெட்டி ஆலை வைத்து தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தீப்பெட்டி விற்பனை செய்து வருகிறார். வினோத் பிரகாரன் செய்து வரும் தீப்பெட்டியில் முன் பக்கம் யானை படத்துடனும், பின்பக்கம் யானை மற்றும் யானை தலை தும்பிக்கையுடன் இருக்கும் டிரேட் மார்க் சான்று பெற்று தன்னுடைய பிராண்டாக உற்பத்தி செய்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக யானை பிராண்டினை பயன்படுத்தி தீப்பெட்டி உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். இவருடைய தீப்பெட்டி பண்டல்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சிலர் வினோத்பிரபாகரன் யானை பிராண்டினை தவறாக பயன்படுத்தி , அவரது பிராண்ட் போல தீப்பெட்டி தயார் செய்து சந்தையில் விற்பனை செய்து வருகின்ற தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து வினோத் பிரபாகரன் விசாரணை செய்த போது, அதே சிட்கோ தொழிற் பேட்டையில் ஸ்ரீ அபிசேகபிரியன் மேட்ச் இன்டஸ்டரிஸ் என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை நடத்தி வரும் சரவணன், வெங்கடேஷ் மற்றும் குட்டி ஆகியோர் மேட்ச் டிரேடிங் கம்பெனி நடத்தி வரும் ஹரிஸ் என்பவருக்காக வினோத்பிரபாகரின் டிரேட் மார்க் பிராண்டினை பயன்படுத்தி மோசடியாக தீப்பெட்டி உற்பத்தி செய்யபடுவது தெரியவந்துள்ளது.இது குறித்த தகவல் கிடைத்தும் வினோத் பிரபாகரன், முறையாக பதிவு செய்து வைத்துள்ள தனது பிராண்டினை பயன்படுத்தி எப்படி தீப்பெட்டி உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்ட போது, முறையாக பதில் தரமால் அப்படித்தான் செய்வோம் உன்னால் முடிந்ததை பார் என்று கூறி மிரட்டியுள்ளனர்.
இதில் மேட்ச் டிரேடிங் கம்பெனி நடத்தி வரும் ஹரிஸ் என்பவர் தூத்துக்குடி வடக்கு பாஜக மாவட்ட துணை தலைவர் பாலு என்பவரின் மகன் என்பது குறிப்பிடதக்கது.
இதையெடுத்து வினோத் பிரபாகரன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அங்கு சரியான நடவடிக்கை இல்லை என்பதால் நெல்லையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் வினோத் பிரபாகரன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்டு அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி, வினோத் பிரபாகரன் டிரேட் மார்க் பிராண்டினை மோசடியாக பயன்படுத்தி தீப்பெட்டி உற்பத்தி செய்தது தொடர்பாக தீப்பெட்டி உற்பத்தி செய்த சரவணன், வெங்கடேஷ், குட்டி மற்றும் போலியாக தீப்பெட்டி லேபில் அடித்து கொடுத்த ஹரிஸ் ஆகிய 4 பேர் மீது 51(டி)(1), 63(ய) என்ற 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட வினோத் பிரபாகரன் கூறுகையில் தீப்பெட்டி தொழில் பல்வேறு பிரச்சினை சந்தித்து வரும் நிலையில் நல்ல நிலையில் சந்தையில் விற்பனையாகி கொண்டு இருக்கும் பிராண்ட்கள் மாதிரி போலியாக தீப்பெட்டி உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் கும்பல்கள் அதிகரித்துள்ளது. இதனால் எங்களை போன்ற உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருப்பதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Tags :