மாஞ்சோலை மக்கள் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியோடு சந்திப்பு.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில், குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தனியார் பிபிடிசிஎல் தேயிலைத் தோட்ட நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தை மூடியது. நான்கு தலைமுறைகளாக அங்கு பணி செய்து வந்த தொழிலாளர்களிடம் கட்டாய ஓய்வு விருப்பத்தை பெற்று குடியிருப்புகளை காலி செய்ய வலியுறுத்தியது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வேலைவாய்ப்பு இல்லாததால் அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
முன்னதாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசின் டான் டீ மூலமாக தேயிலை நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகின்றது. போராட்டங்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவும், பத்திரிக்கை அறிக்கைகள் மூலமாகவும் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கூட்டுக்குழுவினருடன் இணைந்து எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கூட்டுக்குழுவினர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முயற்சியில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்வில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கூட்டுக்குழுவைச் சேர்ந்த சேரன்மகாதேவி சேகரகுரு அருட்தந்தை கிப்சன் ஜான்தாஸ், அருட்தந்தை ஜெரால்டு, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜன் மற்றும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், எஸ்டிபிஐ கட்சி சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஷரீப் பாஷா, பொதுச் செயலாளர் விக்காயத்துல்லா, செயலாளர் ஷேக் மூஸா, பொருளாளர் பைரோஸ், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அப்சர் அலி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
.
Tags : மாஞ்சோலை மக்கள் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியோடு சந்திப்பு.