35 தனியார் தங்கும் விடுதிகளை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்.

by Editor / 18-08-2024 11:57:25pm
 35 தனியார் தங்கும் விடுதிகளை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக யானைகள் வழித்தடம் துண்டிக்கபட்டுள்ளதாக கூறி 2008 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் உயர் சென்னை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு யானை வழித்தடத்தில் உள்ள 38 தனியார் தங்கும் விடுதிகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்படி 38 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

ஆனால் யானை வழித்தட வழக்கில் மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நீதிமன்றத்திற்கு பல்வேறு தவறான தகவல்களை வழங்கி இருப்பதாக தங்கும் விடுதி உரிமையாளர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட. விசாரணைகுழு அமைக்கபட்டது. அந்த குழு சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து விசாரணை நடத்தியது.

விசாரணை முடிந்ததை அடுத்து தனியார் தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான உரிமத்தை பெற்று கட்டப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும் எனவே அவற்றை இடிக்கவும் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த கமிட்டி உத்தரவுப்படி தற்போது மாவட்ட நிர்வாகம் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தனியார் தங்கும் விடுதிகள், பொக்காபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 20 தனியார் தங்கும் விடுதிகள் என ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ள 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்றி கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகம் பதிவு தபால் மூலமாக அனுப்பி உள்ளது. 

குறிப்பாக இந்த தனியார் தங்கும் விடுதி கட்டிடங்கள் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி கட்டிட விதி மற்றும் நகர்ப்புற ஊரமைப்பு சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ளதால் இடித்துக் கொள்ளுமாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :  35 தனியார் தங்கும் விடுதிகளை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்..

Share via