கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு மாறுகண் நோய் 5 மடங்கு அதிகரிப்பு

by Admin / 14-08-2021 01:03:54pm
கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு மாறுகண் நோய் 5 மடங்கு அதிகரிப்பு

சென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளுக்கான மாறுகண் நோய் 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக டாக்டர் அகர்வால்ஸ் கண் ஆஸ்பத்திரி தெரிவித்து உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு மாறுகண் நோய் 5 மடங்கு அதிகரிப்பு
கண் பரிசோதனை

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் அனுசரிக்கப்படும், ‘குழந்தைகளின் கண் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்' நிகழ்ச்சியையொட்டி, டாக்டர் அகர்வால்ஸ் கண் ஆஸ்பத்திரியின் குழந்தைகளுக்கான முதுநிலை கண் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் இணையதளம் வாயிலான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் சென்னையை சேர்ந்த குழந்தைகள் மத்தியில் ‘மாறுகண் அல்லது ஒன்றரை கண்’ பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென, எதிர்பார்க்காதவாறு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 5 மடங்குகள் அதிகரித்திருப்பது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறது. அதைப்போலவே, கிட்டப்பார்வை வளர்ச்சி 100 சதவீதம் உயர்ந்திருப்பதும், கடந்த 2 ஆண்டுகளில் இது 25 சதவீதம் அதிகரித்திருப்பதும் கவலையை உருவாக்கி இருக்கிறது.
 
வீட்டிற்கு வெளியே சூரியஒளி படுமாறு இல்லாததும் மற்றும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கை செயல்பாடுகள் மிகவும் குறைந்திருப்பதுமே இவற்றிற்கு காரணமாக உள்ளன. மேலும், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், செல்போன், கணினி, டி.வி. ஆகியவற்றின் திரைகளைப் பார்க்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் இவற்றிற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

சென்னையில், கொரோனா தொற்றுக்கு முன்பு ஒரு ஆண்டில் 1 அல்லது 2 பாதிப்பு நேர்வுகளையே நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு 10-க்கும் அதிகமான குழந்தைகள் இப்பாதிப்பினால் சிகிச்சைக்கு வந்திருக்கின்றனர்.

கணினி திரைக்கு முன்பாக அல்லது செல்போனுக்கு முன்பாக இடைவேளையின்றி ஒரு குழந்தை ஒரு மணி நேரம் செலவிடுவதை, மாற்றி அமைத்து அடிக்கடி இடைவேளைகளை எடுத்துக்கொண்டு, 3 மணி நேரம் இதே செயல்பாட்டை மேற்கொண்டால் இது போன்ற பாதிப்புகள் குறையும். ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதால், செல்போன்களுக்கு பதிலாக, மடிக்கணினி அல்லது கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் செய்யவேண்டும்.

கிட்டப்பார்வை வளர்ச்சி என்பது, பாதிப்பிற்கு ஆளாகும் நபருக்கும், நாட்டுக்கும் ஒரு பொருளாதார சுமையாகவும் இருக்கிறது. சூழல் மாற்றங்களை செய்வதன் மூலம் கிட்டப்பார்வை வளர்ச்சியைக் குறைக்க கண் டாக்டர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via