பழைய குற்றால அருவி விவகாரம்:மரு.கிருஷ்ணசாமி அறிக்கை.

by Editor / 28-08-2024 11:27:05pm
பழைய குற்றால அருவி விவகாரம்:மரு.கிருஷ்ணசாமி அறிக்கை.

தென்காசி மாவட்ட நிர்வாகம் பழைய குற்றால அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் முயற்சியை முற்றாகக் கைவிட வேண்டும் புதியதமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, செண்பக அருவி,சிற்றருவி, பழைய குற்றாலம், பழத்தோட்ட அருவி உள்ளிட்ட  அருவிகளில் மக்கள் சென்று குளிப்பது தான் இதனுடைய சிறப்பு அம்சமாகும். செண்பக அருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி போன்றவை வனப்பகுதிகளுக்குள் இருப்பதாக கூறி வனத்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பள்ளி மாணவர் இறந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய குற்றாலத்தையும் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு உண்டான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. பழைய குற்றால அருவி, பிரதான அருவி, ஐந்தருவி ஆகியன பல்லாயிரக்கணக்கான மக்கள் எளிதாகச் சென்று வரக்கூடிய இடங்கள் ஆகும். இந்த அருவிகளில்  குளிப்பதற்கு என்றே லட்சக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து குற்றாலத்திற்கு வருகை புரிகிறார்கள்.

ஒரு விபத்தைக் காரணம் காட்டி பழைய குற்றால அருவி பகுதியை வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வதால் சாதாரண பொது மக்களுடைய ஒட்டுமொத்த நடமாட்டத்தையும் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய சூழல் ஏற்படும்.

பழைய குற்றால அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் விபத்துக்கள் ஏதும் நிகழா வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக வனத்துறையிடம் ஒப்படைப்பது என்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை.

எனவே, தென்காசி மாவட்ட நிர்வாகம் பழைய குற்றால அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் முயற்சியை முற்றாகக் கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். தேவைப்படும் பட்சத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : பழைய குற்றால அருவி விவகாரம்:மரு.கிருஷ்ணசாமி அறிக்கை.

Share via