மதுரை மற்றும் தூத்துக்குடி விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு.
நாளை ஆயுத பூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்றே தயாராகி உள்ளனர். பொதுமக்களின் பயணங்களை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது.
இந்நிலையில் வழக்கத்தைவிட விமானங்களில் கட்டணவிலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் வழக்கமாக ரூ. 5,000 வரை விற்கப்படும் நிலையில், இன்று ரூ. 16,000 வரை விற்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானங்களின் கட்டணம் ரூ.3,300-இல் இருந்து ரூ.13,000 வரை இணையதளத்தில் விற்கப்பட்டு வருகின்றது. இதனிடையே மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில், கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு ரூ. 3,000 வரை பயணச்சீட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
Tags : சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு.