தேர்தல் வாக்குறுதிகள்: சட்டசபையில் தி.மு.க. – அ.தி.மு.க. கடும் வாக்குவாதம்
சட்டசபையில் அ. தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவருக்கும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையில் கடந்த 13 ந் தேதி 2021 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார். மறுநாள் (14ந் தேதி) நாட்டிலேயே முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு என்று தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டசபையில் இன்று பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை துறை பட்ஜெட் மீது பொது விவாதம் துவங்கியது. முதலாவதாக அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
ஆர்.பி.உதயகுமார்: நிதியமைச்சர் கடந்த 9 ந் தேதி வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நிதி நிலைமை குறித்தும், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் சொல்லியிருக்கிறார். நிதி நிலைமை சீரமைக்க 2, 3 ஆண்டு ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
வருவாய் பற்றாக்குறை 58 ஆயிரத்து 692 கோடி ரூபாய் என்றும் நிதி பற்றாக்குறை 92 ஆயிரத்து 579 கோடி ரூபாய் என்றும் 92 ஆயிரத்து 484 கோடி ரூபாய் கடன் பெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
பூனை எலியை வாயில் கவ்விச் செல்வதும் உண்டு, அதே போன்று பூனை தனது குட்டியை கவ்விக்கொண்டு செல்வதும் உண்டு. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அரசின் பட்ஜெட் குட்டிப்பூனையை தாய் கவ்விச்சென்றது போல தாய் பாசம் இருக்க வேண்டும். எலியை கவ்விக்கொண்டு செல்வது போல இருக்கக் கூடாது.
அம்மா 2011 ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது மாநில அரசின் நிதி நிலை மிக மோசமாக இருந்தது. புதிய திட்டங்கள் எதுவும் துவங்க எந்த நிதி ஆதாரமும் இல்லை. ஒரு லட்ச கோடிக்கும் மேல் கடன் சுமை இருந்தது. மின்சார பகிர்மான கழகம் மற்றும் போக்குவரத்து கழகத்திற்கு தொடர் வருவாய் இழப்பு இருந்தது. பெரும் கடன் சுமை அபாயம் இருந்தது.
மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்த அம்மா அந்த நிதி சுமையை ஏற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.ஒரு கோடியே 83 லட்ச குடும்பங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்திற்கு ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: பணத்தின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு குறையும். பண வீக்கம் இருக்கும். இன்றுள்ள கணக்கையும் முன்புள்ள கணக்கையும் சமமாக கருதக்கூடாது. 2006 -07 ல் தி.மு.க. ஆட்சியில் உற்பத்தியில் இருந்த கடன் 18 சதவீதம் இருந்தது. இது 5 வருடத்தில் குறைந்து 15.7 சதவீதத்திற்கு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் 2011 12ல் ஓரளவு குறைந்தது. அதன் பின் அதிகரித்தது. அதாவது 27 சதவீதம் உற்பத்தி கடன் இருந்தது.
கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிட்டார்கள். அதில் எத்தனை அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன. நிதி ஒதுக்காமலேயே திட்டங்களை அறிவித்தனர். புதிய திட்டங்கள் இல்லை. செயல் திறனும் இல்லை. அறிவித்த பலவற்றை செய்யவே இல்லை.
ஆர்.பி.உதயகுமார்: ஒரு கோடியே 83 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியை வழங்கி இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் முதியோர்களுக்கு ரூ.500 ஓய்வூதியம் கொடுத்தீர்கள். ஆனால் ஏழைகள் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் அரசு 35 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளித்தோம்.
நிதியமைச்சர்: ஓய்வூதியத்தை உயர்த்தினீர்கள். ஆனால் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த 25 சதவீதம் பேரை விட்டு விட்டீர்கள். எனது தொகுதியிலேயே 800 பேரிடம் இருந்து ஓய்வூதியம் கேட்டு மனுக்கள் வந்தது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: 2006 2011 ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சியில் 7 லட்சம் ஓய்வூதியதாரர்களை நீக்கினார்கள். எந்த அடிப்படையில் அவர்களை நீக்கினார்கள். இதற்கு பதிலே வரவில்லை.
ஆர்.பி.உதயகுமார்: ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் தருவோம் என்று சொன்னோம். அதனை வழங்கினோம். உங்கள் ஆட்சியில் இதற்காக 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினீர்கள். அம்மா, 4200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
அமைச்சர் பெரியசாமி: முதியோர் உதவித்தொகை முதலில் 200 ரூபாயாக இருந்ததை கருணாநிதி 400 ரூபாயாக உயர்த்தினார். பின்னர் அதனை 500 ரூபாயாக உயர்த்தினார். இந்தியாவிலேயே 1 கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி 20 ரூபாய்க்கு கொடுத்தார். கடந்த ஆட்சியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. நாங்கள் ஒரு ரூபாய்க்கு கொடுத்து சாதனை படைத்தோம்.
எடப்பாடி பழனிசாமி: முதியோர் உதவித்தொகையை நீங்கள் உயர்த்தினீர்கள். ஆனால் அம்மா தகுதியானவர்களை கண்டுபிடித்து ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கினார். அம்மா மறைவுக்கு பின் தகுதி உள்ளவர்களை கண்டுபிடித்து தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டதை விட 60 சதவீதம் கூடுதலாக வழங்கினோம். வீரபாண்டி தொகுதியிலேயே தேர்தல் நேரத்தில் 18 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி இருக்கிறோம். தகுதி இல்லாதவர்கள் நீக்கப்பட்டனர்.
அமைச்சர் பெரியசாமி: எதிர்க்கட்சி தலைவர் சொல்வதில் உண்மை இல்லை. தகுதி இல்லாதவர்களை நீக்கியதாக சொல்கிறார். அதற்கு பட்டியல் இருக்கிறதா? அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன். இதனை சவாலாகவே கூறுகிறேன்.
எடப்பாடி பழனிசாமி: யார் யார் தகுதி இல்லாதவர்கள் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தாசில்தார் கணக்கெடுத்து நீக்கம் செய்தார்.
அமைச்சர் பெரியசாமி: கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு போதிய அவகாசம், அனுமதி தரப்படவில்லை. தி.மு.க. ஆட்சி விதி, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது.
அமைச்சர் எ.வ.வேலு: தகுதி இல்லாதவர்களை நீக்கினோம் என்று கூறுகிறார், எனது மாவட்டத்திலேயே தகுதி உள்ளவர்கள் நீக்கப்பட்டார்கள். நான் அப்போதே இதற்கு பொறுப்பு ஏற்கிறேன் என்று கூறியிருந்தேன். தவறு செய்த அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அப்போது ஆட்சியில் இருந்த அண்ணா தி.மு.க. தெரிவித்தது. ஆனால் எந்த அதிகாரியும் நீக்கப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி: அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. இதனை சபாநாயகர் கூறியிருக்கிறார்.
நிதியமைச்சர்: நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது 600 க்கும் மேற்பட்ட மனுக்களை அதிகாரியிடம் கொடுத்தேன். இப்போதுள்ள நிதி நிலைமையில் ஏற்கனவே உள்ள பயனாளிகள் குறைந்தால் தான் ஓய்வூதியம் தர முடியும் என்று கூறினார். இந்த நிலையில் 50, 75 பேருக்கு தான் கொடுத்தார்கள். தகுதி உள்ள பயனாளிகளுக்கு தரவில்லை.
ஆர்.பி.உதயகுமார்: அண்ணா தி.மு.க. அறிவித்த 715 அறிவிப்புகளில் 537 சமூக பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றினோம். மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தினோம். 161 அறிவிப்புகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. மீதி உள்ள அறிவிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் திட்டங்களை கொண்டு வந்தோம். எந்த தடை, நிதி சிக்கல் வந்தாலும் அதை தகர்த்து எறிந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்த திட்டங்களை நிறைவேற்ற பின்வாங்கவில்லை. 1980 ம் ஆண்டு எம்.ஜி.ஆர். 2 ம் முறையாக ஆட்சி அமைத்த போது உயர் அலுவலர்களை எல்லாம் அழைத்து சத்துணவு திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறினார். இப்போது உள்ள நிதி நெருக்கடியில் செலவு அதிகமாகும். பணம் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.
பணமில்லையா, மனமில்லையா என்று கேட்ட எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக கூறினார்.
Tags :