தமிழ்நாடு போலீசார் குற்றவாளிகளை பிடிக்க ‘மாஸ்டர் பிளான்’ ‘பறவை, பருந்து’ பார்வை.
தமிழ்நாட்டில் திருட்டு, வழிப்பறி, அடிதடி மோதல், சதி திட்டம், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை, மோசடி என பல்வேறு குற்றங்கள் நாட்டில் நடக்கிறது.படித்த பட்டதாரிகளும், இளம்வயதினரும் குற்றங்களில் அதிகளவு ஈடுபடுவதாக தெரிகிறது. குற்றவாளிகள் தொடர்பாக சிசிடிஎன்எஸ் என்ற வெப்சைட்டில் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.கடந்த 10 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான வழக்கு விவரங்கள், குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், தேடப்பட்டு வரும் நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றங்களை குறைக்க, குற்றவாளிகள் தொடர்ந்து குற்றம் செய்யாமல் தடுக்க புதிய திட்டங்களை நிறைவேற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு போலீசில் ‘பறவை’ என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டது. முதல் முறையாக குற்றத்தில் ஈடுபடும் வாலிபர்கள், தவறான சகவாசத்தில் தப்பு செய்பவர்கள், என்ன விவரம் என தெரியாமல் குற்றவாளிகளுடன் சேர்ந்து சுற்றி, குற்ற செயல்களுக்கு துணையாக போய் மாட்டி கொள்வது, போதையில் தவறு செய்பவர்கள் போன்ற நபர்களை குறிப்பாக 18 முதல் 24 வயது வரையுள்ள இளம் குற்றவாளிகளை கண்டறிய பிரத்யேக செயலியான ‘பறவை’ மூலமாக பல்வேறு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
‘பறவை’ திட்டத்தின் நோக்கம் முதல் குற்றவாளிகள் அடுத்த முறை குற்றம் செய்யாமல் தடுப்பதே. குற்றம் எந்த மாதிரி சூழலில், எப்படி நடந்தது? என ஆய்வு செய்யப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தகுந்த கவுன்சலிங் வழங்கப்படும். இலவச சட்ட உதவி, வேலை வாய்ப்பு போன்றவை ஏற்பாடு செய்து தரப்படும். இதேபோல, சரித்திர பதிவேட்டில் உள்ள பழைய குற்றவாளிகளை கண்காணிக்க ‘பருந்து’ என்ற திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது. ‘பருந்து’ செயலி மூலமாக கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இடம், கடை, வாடகை, மிரட்டல் மூலமாக பணம் வசூலிக்கும் நபர்கள், கட்ட பஞ்சாயத்தில் பணம் வாங்கும் ரவுடிகள், ரியல் எஸ்டேட் தொழிலில் மிரட்டும் கும்பல், பருந்து செயலியில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். அடிதடி, மோதல், தாக்குதல், தகராறு, கத்தி காட்டி மிரட்டும் நபர்களும் இந்த சரித்திர பதிவேட்டில் சேர்க்கப்படுவர். சிறையில் இருப்பவர்கள், ஜாமீனில் சென்றவர்கள், பழிக்கு பழி வாங்கும் நபர்கள் கட்டம் கட்டப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் ஏ பிளஸ், ஏ,பி,சி,டி என குற்றவாளிகளை வகைப்படுத்தி மாவட்டம், போலீஸ் ஸ்டேஷன் வாரியாக குற்றவாளிகளை மடக்க ‘பருந்து’, ‘பறவை’ டெக்னாலஜி பிரதானமாக பயன்படுத்தப்படும். இனி ஏரியா விட்டு ஏரியா போய் கைவரிசை காட்டி தப்பலாம் என கணக்கு போடும் குற்றவாளிகள் எல்லை தாண்டும் முன் சிக்கிவிடுவார்கள். வெளி மாநில குற்றவாளிகளை மடக்க தேவையான ‘பிளான்’ போட தொழில்நுட்ப பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றம் தடுப்பு, குற்றவாளிகள் கண்காணிப்பு மூலமாக மாநில அளவில் குற்ற சம்பவங்கள் குறையும். போலீசின் மாஸ்டர் பிளான் மூலமாக சட்டம் ஒழுங்கு, குற்றம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.
Tags : ‘மாஸ்டர் பிளான்’