ரயில் தொலைத்தொடர்பு கம்பி வடம் துண்டிப்பு நிகழ்வுகள் அதிகரிப்பு-ரயில்வே எச்சரிக்கை.

by Editor / 02-11-2024 07:25:42pm
ரயில் தொலைத்தொடர்பு கம்பி வடம் துண்டிப்பு நிகழ்வுகள் அதிகரிப்பு-ரயில்வே எச்சரிக்கை.

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் ரயில் பாதை அருகே பூமிக்கு அடியில் செல்லும் தொலைதொடர்பு கம்பி வடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இரண்டு ரயில் நிலையங்களுக்கிடையே செல்லும் இந்த தொலை தொடர்பு கம்பி வடம் ஒரு ரயில் பாதையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களை இயக்குவதை தடுப்பதற்கும், ரயில் வருவதற்கு முன்பாக குறித்த நேரத்தில் கடவுப் பாதையை (ரயில்வே கேட்) மூடுவதற்கும் பயன்பட்டு வருகிறது. தனியார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது திட்டப் பணிகளின் போது அருகிலுள்ள இந்த முக்கியமான தொலைதொடர்பு கம்பி வடத்தை துண்டிக்கும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. சமீபத்தில் திருப்பரங்குன்றம் அருகே உள்ளாட்சி அமைப்பினர், இறந்த உருக்குலைந்த கால்நடைகளை புதைக்கும் முயற்சியில் ரயில்வே தொலை தொடர்பு கம்பிவடத்தை துண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட ஜேசிபி ஓட்டுநர் ரயில்வே பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சமீபத்தில் திண்டுக்கல் அருகே உள்ளாட்சி அமைப்பின் சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் போது கம்பி வடம் துண்டிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே சட்டப்படி ரயில் பாதை மற்றும் ரயில்வே எல்லை அருகே பணிகள் துவங்கும் முன்பு உரிய ரயில்வே அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ரயில்வே அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு பணியை தொடர்ந்தால் ரயில்வே சொத்தை சேதப்படுத்தும் நிகழ்வுகளை தவிர்க்கலாம். இதை மீறி தொலை தொடர்பு கம்பி வடத்தை துண்டிப்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 154 - ன் படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டப் பிரிவை மீறுபவர்கள் மீது ஒராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் துண்டிக்கப்பட்ட கம்பிவடத்திற்கான நஷ்ட ஈடு மற்றும் பராமரிப்பு செலவும் வசூலிக்கப்படும். ரயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் பாதை அருகே பணிகளை மேற்கொள்ளும் தனியார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஒப்பந்ததாரர்கள் ரயில்வே துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Tags : ரயில் தொலைத்தொடர்பு கம்பி வடம் துண்டிப்பு நிகழ்வுகள் அதிகரிப்பு-ரயில்வே எச்சரிக்கை.

Share via