தொடர் கனமழை திருவாரூர் மாவட்டத்தில் 1100 ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மான்கண்டமூளை, நெம்மேலி, அதம்பார் வடகுடி கம்மங்குடி நரிக்குடி ஜெகநாதபுரம் வேலங்குடி திருக்கொட்டாரம் பாவட்டகுடி நாகராஜன் கோட்டகம் கள்ளிக்குடி முகந்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட 1150 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குறிப்பாக 45 நாட்கள் ஆன சம்பா நெல் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு இதுவரை 8000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளது. மேலும் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த மழை பெய்தால் நெல் பயிர்கள் அனைத்தும் அழுகி வீணாகிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் கிராமங்களில் உள்ள மான்கண்டமூளை, நெம்மேலி வடிகால் வாய்க்கால் அதம்பார் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததன் காரணத்தினால் மழை நீரை வடிய வைக்க முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : தொடர் கனமழை திருவாரூர் மாவட்டத்தில் 1100 ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.