சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.

by Editor / 08-12-2024 10:59:48am
சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.

 சபரிமலையில் விடுமுறைதினங்கள் என்பதால் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பல மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒருசில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தையும் தாண்டியம் வந்தவண்ணமுள்ளனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வண்டிப்பெரியார், எருமேலி மற்றும் பம்பை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு செய்து தரிசனம் செய்கின்றனர். கடந்த 3வாரங்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 20லட்சத்தையும் தாண்டி விட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும், அரவணை, அப்பம் பிரசாதம் வாங்குவதற்கும் நீண்ட வரிசை காணப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதாலும், இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சபரிமலையில் நேற்று நிருபர்களிடம் கூறியது: சபரிமலையில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.ஆனாலும் எந்த சிரமும் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.இந்த வருடம் சபரிமலை கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது.

நடைதிறந்த 23 நாட்களில் கிடைத்த மொத்த வருமானம் ரூ100கோடியை தாண்டியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.சபரிமலை தரிசனத்திற்கு 10 வயதுக்கு உட்பட்ட ஏராளமான சிறுவர் சிறுமிகளும் வருகின்றனர். இவர்களுக்கு எளிதில் தரிசனம் செய்வதற்காக 18ம் படிக்கு மேல் சிறப்பு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயில் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யலாம். சிறுவர், சிறுமிகளுடன் பெரியவர் ஒருவரும் செல்லலாம். இந்த வரிசையில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.விடுமுறைதினங்களில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

 

Tags : சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.

Share via