இரட்டைக் கொலையில் பரபரப்பு திருப்பம் வாலிபர் உள்பட 10 பேர் சிக்கினர்

by Admin / 14-03-2022 02:41:48pm
இரட்டைக் கொலையில் பரபரப்பு திருப்பம்  வாலிபர் உள்பட 10 பேர் சிக்கினர்

ஆவடி, மசூதி தெருவை சேர்ந்தவர் அரசு என்கிற அசாருதீன் (வயது 30). ஆவடி மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். ஆவடி கவுரிப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர் (30) ஆட்டோ டிரைவர். இருவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் நண்பர்களான ஆவடி வீட்டுவசதி குடியிருப்பை சேர்ந்த ஜெகன் மற்றும் சிலருடன் ஆவடி பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் மது அருந்தினர். 

அப்போது மர்ம கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.அவர்கள் சுந்தர், அசாருதீனை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். 

இந்த தாக்குதலில் ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.இரட்டை கொலை தொடர்பாக ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆவடிடேங்க் பேக்டரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கள்ளக்காதல் தகராறில் இந்த இரட்டை கொலை நடந்திருப்பதும், குறி வைத்தவர் தப்பியதால் தடுக்க முயன்ற நண்பர்களான சுந்தர், அசாருதீன் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் உள்பட 10 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மணிகண்டனும் ஜெகனும் வெவ்வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது நண்பர்களாக பழகி உள்ளனர். ஜெயிலில் இருந்து வந்த பின்னரும் அவர்களது நட்பு தொடர்ந்தது.

மணிகண்டனின் வீட்டுக்கு ஜெகன் அடிக்கடி சென்றுவந்தார். அப்போது மணிகண்டனின் மனைவியுடன் ஜெகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு மணிகண்டனின் மனைவியை ஜெகன் அபகரித்து அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறு காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஜெகன் தனது நண்பர்களுடன் சென்று மணிகண்டனை தாக்கி உள் ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ஜெகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். நேற்று முன் தினம் இரவு ஜெகன் தனது நண்பர்களுடன் ஓ.சி.எப். மைதானத்தில் இருப்பது மணிகண்டனுக்கு தெரிந்தது.

இதையடுத்து மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெகனை சுற்றிவளைத்தார். ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார். இந்த தாக்குதலை தடுக்க முயன்ற ஜெகனின் நண்பர்களான சுந்தர், அசாருதீன் ஆகிய இரண்டு பேரையும் கொலைவெறி கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது தற்போது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலைக்கு மணிகண்டன் கூலிப்படையை ஏவி உள்ளார். கூலிப்படையை சேர்ந்த சிலரை போலீசார் பிடித்துள்ளனர். மணி கண்டன் உள்பட 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் 

 

Tags :

Share via