நியூஸ் கிளிக் இணையத்தள செய்தி நிறுவனர் உபா சட்டத்தில் கைது!
'நியூஸ்கிளிக்' இணையத்தள செய்தி நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா, உபா எனப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடந்த 3 ஆண்டுகளில் 38 கோடி ரூபாய் பணம் பெற்ற குற்றச்சாட்டில் நியூஸ் கிளிக் இணையத்தள ஊடக நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
அதன் அடிப்படையில், நேற்று காலை நியூஸ் கிளிக் இணையத்தள அலுவலகம், அதில் பணியாற்றும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் டெல்லி, நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சோதனை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சிபிஎம் நிர்வாகி ஒருவரின் மகன் 'நியூஸ் கிளிக்' இணையத்தள ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் யெச்சூரியின் வீட்டில் தங்கியுள்ளதால் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சோதனையில் நிறுவன ஊழியர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சீனாவுக்கு ஆதரவாக செய்தி பதிவிட பணம் பெற்றதாகக் கூறி, நேற்று மாலை நியூஸ் கிளிக் இணையத்தள ஊடக நிறுவனத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 'நியூஸ் கிளிக்' நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் நிறுவனத்தின் மனிதவள துறை பிரிவு அலுவலர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags : நியூஸ் கிளிக் இணையத்தள செய்தி நிறுவனர் உபா சட்டத்தில் கைது!