ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து வரும் 26-ம் தேதி மண்டல பூஜை

by Admin / 23-12-2024 10:12:43am
 ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து வரும் 26-ம் தேதி மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவ. 16-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தினமும் சராசரியாக 80 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 96,853 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. . அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்படும். இதற்காக ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி இன்று (டிச.22) காலை 6 மணிக்கு புறப்பட உள்ளது. பல இடங்களில் பக்தர்களின் தரிசனத்துக்குப் பிறகு இந்த ரதம் வரும் 25-ம் தேதி மதியம் பம்பைக்கு வருகிறது..

 கணபதி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக இந்தப் பேழை வைக்கப்படும். பின்பு தலைச் சுமையாக இந்தப் பெட்டி சந்நிதானத்துக்கு கொண்டு செல்லப்படும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து, தீபாராதனை நடைபெறும். பின்பு தங்க அங்கி காப்பறையில் வைக்கப்படும்..

வரும் 26-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தங்க அங்கி அணிவித்து, மண்டல பூஜை நடைபெறும். அன்றுடன் மண்டல பூஜை நிறைவு பெறுவதால், இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிச. 30-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி மண்டல பூஜையில் சந்நிதானத்தில் நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இதன்படி, வரும் 25, 26-ம் தேதிகளில் ஸ்பாட் புக்கிங் மூலம் தலா 5 ஆயிரம் பக்தர்களையும், ஆன்லைன் பதிவு மூலம் 60,000 பக்தர்களையும் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

 

 ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து வரும் 26-ம் தேதி மண்டல பூஜை
 

Tags :

Share via