பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்
பெட்ரோல் விலை குறைப்பின் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரைக்காக இன்று சட்டப்பேரவை கூடியது. பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சராசரியாக ஒருநாள் பெட்ரோல் விற்பனை 9,180 கிலோ லிட்டர் விற்பனையானது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சராசரியாக ஒரு நாள் பெட்ரோல் விற்பனை 10,317 கிலோ லிட்டர் விற்பனையாகியுள்ளது. பெட்ரோல் விலைகுறைப்பால் மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
பெட்ரோல் விலை குறைப்புக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்த அவர், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததனால் 12 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி ஒன்றிய அரசிற்கு கிடைக்கும் என்றும், இதற்கு பிரதமரும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.
நிதி இல்லாத போது எவ்வளவு திறமை இருந்தாலும் சமாளிக்க முடியாது, சில செலவுகள் பண வீக்கத்திற்கு ஏற்ப அதுவாக அதிகரிக்கிறது என்ற அமைச்சர், "110 விதியின் அடிப்படையில் கடந்த பத்து வருடங்களில் எத்தனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது அதில் எத்தனை செயல்படுத்தப்பட்டது? அதற்கு நிதி எங்கிருந்து வந்தது ? எப்படி செலுத்தப்பட்டது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தி இந்த கூட்டத்தொடரிலேயே அவை முன் அறிக்கை வைக்கப்படும். இதேபோல பல துறைகளில் ஆய்வு செய்ய உள்ளோம். இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை" என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்த போது நான் சுட்டிக்காட்டிய பிரச்னைகளை ஆளுங்கட்சி அமைச்சராக வந்த பிறகும் என்னால் தீர்க்க முடியவில்லை என்பது எனக்கு வேதனையாக இருக்கிறது, சில நேரங்களில் எனக்கு அச்சமாகவும் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Tags :