சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது-முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் ..?
2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (ஜன. 6) தொடங்கி வைக்கவுள்ளார்.காலை 9.30 மணிக்கு பேரவை மண்டபத்தில் பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பேரவை மண்டபத்துக்கு வரும் ஆளுநரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பேரவை முதன்மைச் செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்கின்றனர். பின்னர், தமிழக அரசு சார்பில் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே தனது உரையை நிறைவு செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழாண்டும் தமிழக அரசு தயாரித்து அளித்துள்ள உரையை ஆளுநர் முழுமையாகப் படிப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். மறைந்த பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவித்து இன்று முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கூட்டத் தொடரில் பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளும் திமுகவின் தோழமைக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
Tags : சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது-