கனிமொழி கருணாநிதி எம்.பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

by Editor / 10-09-2024 07:57:20am
 கனிமொழி கருணாநிதி எம்.பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலையன்கரிசல், M.சவேரியார்புரம், ராஜிவ் நகர், மாதா நகர் சந்திப்பு, ரோசம்மாள் பேருந்து நிறுத்தம், தாளமுத்து நகர் பிரதான சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிள்ளையார் கோவில் அருகில், பண்டாரம்பட்டி ஆகிய பகுதியில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்

கனிமொழி கருணாநிதி எம்,பி பேசுகையில்: இரண்டாவது முறையாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களால் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்ட எனக்கு இரண்டாவது முறையும், முதல் முறையை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கொண்டு இருக்கின்றார். 

தூத்துக்குடி மக்களுக்காக பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களை, தொழில் நிறுவனங்களின் முதலீடுகள், மிகப்பெரிய வின்பாஸ்ட் கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பகுதியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பயிற்சி கொடுத்து, வேலை கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய முதலீடு கொண்டுவதற்காக, முதல்வர் அமெரிக்கா சென்று ஒவ்வொரு நாளும் அங்கு இருக்கக்கூடிய தமிழர்களைச் சந்தித்தும், தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கான தொழில் முதலீடுகளை கொண்டு வருகிறார்.

தூத்துக்குடியில் இருக்கக்கூடிய மக்களுக்காக பல்வேறு தொழில் முதலீடுகள் வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முன்னேறுவதற்காக எல்லா வகையிலும் முயற்சி செய்யக் கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. நான் உங்களுடைய பாராளுமன்ற பிரதிநிதியாகப் பாராளுமன்றத்தில் உங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று பேசினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின் (முன்னாள் எம்.எல்.ஏ), தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, தூத்துக்குடி கிழக்கு  ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Tags : கனிமொழி கருணாநிதி எம்.பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

Share via