பொள்ளாச்சி சம்பவம் திமுக-அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் ஆதாரங்கள் சமர்பிப்பு.
2025 ஆம் ஆண்டின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜன.6ஆம் தேதி தொடங்கியது. இன்று11 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டசபையில் பல விவகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் முதல்நாளிலிருந்து ‘யார் அந்த சார்?’ என அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்தே கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் நேற்று (ஜன.10) இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“திரும்ப திரும்ப சொல்கிறோம். எந்த காரணத்தைக் கொண்டும் நாங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்க மாட்டோம். அது எங்களுக்கு தேவையும் அல்ல. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்பதுதான் எங்களுடைய கடமை. அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் திரும்பத்திரும்ப இதையே பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் நான் பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து விஷயத்தை தொடங்க வேண்டியது இருக்கும்.
பொள்ளாச்சி வழக்கை பொறுத்தவரையில் புகார் வந்தவுடன் உடனடியாக எஃப்ஐஆர் போடவில்லை. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பொருத்தவரையில் புகார் கொடுத்த உடனே எஃப் ஐ ஆர் போடப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் அடுத்த நாளே கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது பொள்ளாச்சி விவகாரத்தை பொருத்த வரையிலே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 15 நாட்கள் கழித்து தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த 12 நாட்களில் நடந்தது என்ன, குற்றச்சாட்டை பெற்றவர்களை காப்பாற்ற முயற்சித்தீர்கள் என்பதே எங்களுடைய விமர்சனம்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுத்தார். நீண்ட நேரம் இது தொடர்பாகவே விவாதம் நடைபெற்றது.
இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சனிக்கிழமை சமர்ப்பிக்கிறேன். அப்படி ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன்” என்றார்.
அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். பேரவைத் தலைவர் அப்பாவும் இருவரும் நாளை ஆதாரத்தை என்னிடம் தரலாம் என்றார். இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேரவையில் அதிமுக மற்றும் திமுக சார்பில் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
Tags : பொள்ளாச்சி சம்பவம் திமுக-அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் ஆதாரங்கள் சமர்பிப்பு.