திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமானத்திற்கு ஆவாஹனம்.

by Editor / 22-01-2025 07:10:58am
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமானத்திற்கு ஆவாஹனம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடியிலும் என மொத்தம் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது திருவனந்தபுரம் பிரம்மஸ்ரீ சுப்பிரமணியரு தந்திரி தலைமையில் தாந்திரீக முறைப்படி மூலவர் விமானத்திற்கு ஆவாஹனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆவாஹனம் செய்யப்பட்ட கும்ப நீரானது மகா மண்டபத்திற்கு மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு மூலவர் பாதத்திற்கு ஊற்றப்பட்டது. மூலவர், வள்ளி, தெய்வானைக்கு போத்திமார்களும், சண்முகர், நடராஜருக்கு சிவாச்சாரியார்களும், பெருமாளுக்கு பட்டாச்சாரியார்களும், வல்லப விநாயகருக்கு விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர் தலைமையில் திரிசுதந்திரர்களும் பூஜை செய்தனர்.

நிகழ்ச்சியில், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், ஹெச்.சி.எல். நிறுவன நிர்வாக உதவி தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், கும்பாபிஷேக திருப்பணிகளில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக ராஜகோபுரத்தின் மேலே உள்ள 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி கீழே கொண்டுவரப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிந்து அவற்றில் வரகுகள் நிரப்பி கலசங்களை ராஜகோபுரத்தின் மேல் தளத்திற்கு கொண்டு சென்று பொருத்தும் பணிகள் 20 ஆம் தேதி தொடங்கியது.

 

Tags : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்

Share via