கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

by Editor / 12-02-2025 09:05:46am
 கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தில் வீரக்குமார் - லட்சுமி தம்பதி குடும்பத்துடன் வசித்து வந்தனர். கடந்த வாரம் செவ்வாய்கிழமை வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டதால், புதிதாக இருந்த வேறொரு சிலிண்டரை லட்சுமி மாற்றினார். அப்போது, வால்வு சரியாக இல்லாததால் கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கேஸ் சிலிண்டரை மாற்றிய சிறிது நேரத்தில், வீட்டில் பூஜை செய்வதற்காக லட்சுமி, தீபம் ஏற்றச் சென்றார். அதற்காக தீக்குச்சியை லட்சுமி உரசிய போது பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. உடலில் தீப்பற்றியதால், லட்சுமியும், அவரது கணவர் வீரக்குமாரும்  அலறினர்.

பக்கத்து அறையில் இருந்த அவர்களது மருமகன் குணசேகரன் ஓடி வந்து மாமனார், மாமியார் இருவரையும் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பற்றியதால் அவரும் தீக்காயமுற்றார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதிக அளவு தீக்காயங்கள் இருந்ததால் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்தடுத்து மூவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த குணசேகரன், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தியும் நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தினமும் இரு சக்கர வாகனத்தில் மனைவி ஆனந்தியை அவரது நிறுவனத்தில் வேலைக்கு விட்டு விட்டு, தன்னுடைய வேலைக்கு செல்வதை குணசேகரன் வழக்கமாக கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பணி முடிந்ததும் மாமனார் வீட்டுக்கு வந்து காத்திருந்து, மனைவி வந்ததும் அவரையும் அழைத்துச் செல்வது வழக்கம்.

அப்படித் தான் அன்றைக்கு குணசேகரன் மாமனார் வீட்டுக்கு வந்து மனைவியை அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். அப்போது தான் எதிர்பாரதவிதமாக எரிவாயு கசிந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் தமது மாமனார், மாமியாரை காப்பாற்ற முயன்று குணசேகரனும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

Tags :  கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Share via

More stories