மதிப்பெண் சான்றிதழை 23-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை 23-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா காரணமாக நடத்தப்படாமல், பள்ளி அளவில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அரசால் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்ச்சி என்று குறிப்பிட்டு வழங்க அரசு தேர்வுத்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அரசு தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணி முதல் 31-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கு பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அரசு தேர்வுத்துறையின் மூலம் 21-ந்தேதி (நாளை) காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனவே பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :