நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு திரையுலகினர்,அரசியல் தலைவர்கள் இரங்கல்.

by Staff / 18-09-2025 11:57:10pm
நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு திரையுலகினர்,அரசியல் தலைவர்கள் இரங்கல்.

நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக்குறைவால் காலமானார். படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த ரோபோ சங்கர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தி அறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி சின்னத்திரை, வண்ணத்திரை என விரிந்து மக்களை மகிழ்வித்தவர். ரோபோ சங்கரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது X தள பக்கத்தில், " ரோபோ என்பது உன் புனைப் பெயர்தான், என் அகராதியில் நீ மனிதன். என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கிவிடுவாயா நீ? உன் வேலை நீ போனாய், என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என முதல் ஆளாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அவரது நகைச்சுவை திறனால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர் என்றும், அவரது மறைவு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல்நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

Tags : நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு திரையுலகினர்,அரசியல் தலைவர்கள் இரங்கல்.

Share via

More stories