தென்காசி மாவட்டத்தில் 20 கிலோமீட்டர் தொலைவில் சோலார் மின் வேலிகள் அமைக்க ரூ.2 கோடி அவசர நிதிஒதுக்கீடு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் அவ்வப்போது வனவிலங்குகளானது புகுந்து விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவ்வப்போது மனித- வனவிலங்குகள் மோதலும் ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்க விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மனித- வனவிலங்குகள் மோதலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தேவையான நிதி வழங்க தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியிருந்தார்.
குறிப்பாக, கடந்த வருடம் அனுப்பப்பட்ட இந்த அவசர பரிந்துரை கடிதத்திற்கு பிறகும் மனித-வனவிலங்குகள் மோதலை தடுக்க அரசு தீவிரம் காட்டாத நிலையில், விவசாயிகள் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு ஆளாகி அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இதனை தடுக்கும் பொருட்டு தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து, முதற்கட்டமாக, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் சோலார் மின் வேலிகள் அமைக்க ஒரு கோடியே 99 லட்சத்து 66 ஆயிரம் நிதியை அவசர நிதியாக தற்போது தமிழக அரசு விடுவித்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பண்பொழி, வடகரை, சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சோலார் மின்வேலிகள் அமைப்பதற்கான திட்டத்தை தற்போது வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக, இன்னும் ஒரு சில மாதங்களில் இதற்கான பணிகள் தொடங்கும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு தற்போது முதற்கட்டமாக 20 கிலோ மீட்டர் தொலைவில் சோலார் மின்வேலிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளுக்கும் சோலார் மின் வேலிகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : தென்காசி மாவட்டத்தில் 20 கிலோமீட்டர் தொலைவில் சோலார் மின் வேலிகள் அமைக்க ரூ.2 கோடி அவசர நிதிஒதுக்கீடு.



















