மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்:  எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

by Editor / 20-08-2021 06:47:17pm
மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்:  எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு


மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி  பேசியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையின் போது பேசிய சோனியா காந்தி, "வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கு இப்போது இருந்தே வியூகங்களை வகுத்து எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள நான் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சிந்தனையோடு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 5 மாநில பேரவைத் தேர்தல்களில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அடுத்தடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டங்களில் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும்."
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா உள்ளிட்ட 19 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும், வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் அங்கமாகவே இந்தக் கூட்டம் கருதப்படுகிறது.

 

Tags :

Share via