தாய், மகள் கொலை : காட்டுக்குள் பதுங்கி இருந்த குற்றவாளியை டுரோன் மூலம் கண்டு சுட்டுப் பிடித்த போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம், மேல நம்பிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பூவன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி சீதாலட்சுமி (75). இவர்களது மகள் ராம ஜெயந்தி (45). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது தாய் சீதா லட்சுமியுடன் கடந்த சில வருடங்களாக வசித்து வந்தார். கடந்த வாரம் தேவாலயம் சென்று விட்டு வீடு திரும்பிய இவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவை தட்டிய நிலையில். கதவு திறக்கவில்லை. அதன் பின் சீதாலட்சுமியும் அவரது மகள் ராமஜெயந்தியும் வீட்டுக்குள் சடலமாக இருந்ததை பார்த்து உடனடியாக எட்டயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், எட்டயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு சீதாலட்சுமி மற்றும் ராம ஜெயந்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், வீட்டுக்குள் சடலமாக கிடந்த சீதாலட்சுமி. ராம ஜெயந்தி ஆகியோர் அணிந்திருந்த கம்மல்கள், 13 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சீதாலட்சுமி கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பூவனின் பென்ஷன் பணம் மற்றும் கோவில்பட்டியை அடுத்துள்ள கூசாலிப்பட்டியில் உள்ள வீட்டு வாடகை பணம் ஆகியவற்றை கொண்டு வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து
தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு ) சந்தோஷ் ஹதி மணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மற்றும் 5 டிஎஸ்பிக்கள் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 9 தனிப்படை போலீசார் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன்கள் பறக்கவிட்டு தீவிரமாக தேடினர். அப்போது, காட்டுக்குள் பதுங்கியிருந்த முனீஸ்வரன் காட்டு பகுதியில் காவல்துறையை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து, போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்தனர்.
காலில் காயம் அடைந்த முனீஸ்வரன் மற்றும் முனீஸ்வரன் தாக்கியதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ், காவலர் ஜாய்சன் ஆகியோரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர்..
Tags : தாய், மகள் கொலை : காட்டுக்குள் பதுங்கி இருந்த குற்றவாளியை டுரோன் மூலம் கண்டு சுட்டுப் பிடித்த போலீசார்.














.jpg)




