மதுரையில் போட்டிக்கு அழைத்துச் சென்று குமரி மாணவி பலாத்காரம் – பயிற்சியாளர் தற்கொலை முயற்சி.
மதுரைக்கு போட்டிக்காக அழைத்து சென்றபோது 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட டேக்வாண்டோ பயிற்சியாளர் பிரதீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்த பிரதீப், ராமன்புதூர் டேக்வாண்டோ மையத்தில் பணியாற்றி, பள்ளிகளில் பகுதி நேரமாக பயிற்சி வழங்கி வந்தார். கடந்த 11, 12 தேதிகளில் மதுரையில் நடந்த ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் டேக்வாண்டோ போட்டிக்கு மாணவிகளை அழைத்து சென்றபோது, தனியாக வந்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை அறையில் தங்கவைத்து மிரட்டி பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
மாணவி திரும்பியபின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் விவரங்களை தெரிவித்து அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பயத்தில் பிரதீப் தற்கொலைக்கு முயற்சி செய்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடம் மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்டதாக இருப்பதால், வழக்கு அங்கு மாற்றப்பட்டது.
குமரியில் கடந்த சில ஆண்டுகளாக சில விளையாட்டு பயிற்சியாளர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் மற்றும் பள்ளிகள் பயிற்சியாளர்களின் பின்புலத்தை சரிபார்த்து பணியில் அமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags : மதுரையில் போட்டிக்கு அழைத்துச் சென்று குமரி மாணவி பலாத்காரம் – பயிற்சியாளர் தற்கொலை முயற்சி.



















