கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழகத்தில், கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. அதில் இருந்து தப்பிக்க மலை பிரதேசங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதன்படி 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அதிலும், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.சுட்டெரிக்கும் வெயிலை விரட்டியடிக்கும் வகையில் கொடைக்கானலில் தற்போது இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவுகிறது. அதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.அதிகாலை முதலே கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். இவர்கள் கார், சுற்றுலா வேன், பஸ்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வந்தனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போக்குவரத்து போலீசார், நெரிசல் ஏற்பட்ட இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் சுற்றுலா வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்றன.
கொடைக்கானலில் காலை முதலே மிதமான வெப்பத்துடன் கூடிய குளிர்ந்த காற்று வீசியது. இந்த சீதோஷண சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்தபடி வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணா குகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை கண்டுகளித்தனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் பொழுதை போக்கினர். இதுதவிர நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
