ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து எடுத்துவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பறிமுதல் திருவாரூரில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த ஐந்து நபர்களை அதிரடியாக கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.குற்றவாளி தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த ஐந்து நபர்கள் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படவிருப்பதாகவும் சென்னையை சேர்ந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக தனியார் தங்கும் விடுதியில் நுழைந்து 2 கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த பாலகோலானு விஷ்ணுவர்த ரெட்டி என்பவரின் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து இந்த தனியார் தங்கும் விடுதியில் இரண்டு காரர்களில் வந்த ஐந்து நபர்கள் தங்கியுள்ளனர்.இவர்களை தனியார் தங்கும் விடுதியின் பின்பக்கமாக நுழைந்து அவர்கள் தங்கியுள்ள அறைக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சென்ற போது அங்கு ஆந்திராவைச் சேர்ந்த நபர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த நபர் அங்கிருந்து தப்பி விடுதியின் கேட்டில் ஏறி சாலையில் ஓடியுள்ளார் அவரை பின்தொடர்ந்து காவலர் ஒருவரும் விரட்டி பிடிக்க முயற்சி செய்கிறார்.இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ பார்சலாக 200 பார்சல்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கஞ்சா முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் வழியாக படகு மூலமாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து படகுகள் மூலமாகவும் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் மேலும் இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறதா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த இந்த நபர்களிடமிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சாவை பெற்று இலங்கைக்கு அனுப்பி இருக்காலம் என்கிற ரீதியிலும் ஆந்திராவைச் சேர்ந்த ஐந்து நபர்களிடம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா தொடர்ந்து எவ்வாறு பல சோதனை சாவடிகளை கடந்து எடுத்து வரப்படுகிறது என்பது குறித்தும் இதுவரை இந்த கும்பல் எத்தனை முறை இதே போன்று இலங்கைக்கு கஞ்சா கடத்தி இருக்கிறது என்பது குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நாளை காலை திருவாரூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags : ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பறிமுதல்