காட்டு யானைகள் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

by Admin / 26-08-2021 03:58:21pm
காட்டு யானைகள் ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

மிளகுபொடி, தேனீக்கள், மிளகாய் போன்றவைகளை பயன்படுத்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு இடங்களில் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசியதாவது:-
 
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன. மக்களின் உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. கடந்த 6 மாதமாக ஒரு தாய் யானையும் ஒரு குட்டி யானையும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேதபடுத்தி உள்ளது.

விவசாய பயிர்களையும் யானைகள் சேதப்படுத்தி உள்ளன. சேதப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை.

ஏனென்றால் பட்டா இல்லாத இடமாக உள்ளது. எனவே பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்கு அரசின் நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். அகழிகளை வெட்டி யானை ஊருக்குள் வராதவாறு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

கடந்த ஒரு வருடமாக ஆண் மற்றும் பெண் மேக்னா யானைகள் சில கூடலூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு தொந்தரவும் பயிர்களை சேதமும் செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. 45 களப்பணியாளர்கள் கும்கி யானைகள் உடன் அந்த பகுதியில் யானைகளை விரட்ட பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

டிரோன் கேமராக்கள் மூலம் அதை கண்காணித்து வருகிறோம். மிளகுபொடி, தேனீக்கள், மிளகாய் போன்றவைகளை பயன்படுத்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு இடங்களில் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via