பாராட்டிபேசிய மு.க.ஸ்டாலின்; கண் கலங்கிய துரைமுருகன்

by Editor / 23-08-2021 02:16:15pm
பாராட்டிபேசிய மு.க.ஸ்டாலின்; கண் கலங்கிய துரைமுருகன்

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 13ம் தேதி திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பொதுப்பணித்துறையின் கீழ் இருந்த நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டது. அத்துறையின் அமைச்சராக துரை முருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், முதல்முறையாக அந்த துறையின் மீதான மானியக் கோரிக்கை மீது சட்டமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறையின் சார்பில் முதல் மானியக்கோரிக்கை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். நூற்றாண்டு கண்ட சட்டப்பேரவையில் அரைநூற்றாண்டுக்கு முன் வந்த துரைமுருகன், கருணாநிதி, அன்பழகன் மறைவுக்கு பிறகு தனக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் பொன்விழா நாயகராக துரைமுருகன் திகழ்வதாக பாராட்டி தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் பேசியதை கண்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கண்கலங்கினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் மகிழ்ச்சியான சூழல் நிலவ காரணமாக இருப்பவர் துரைமுருகன் என தெரிவித்தார். 2001-ம் ஆண்டு முதல் துரைமுருகனின் செயல்பாடுகளை பார்த்து வருவதாகவும், அவர் அனைவரிடமும் மிகுந்த அன்பு செலுத்துபவர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 50 ஆண்டுகாலம் என்பது நீண்ட நெடிய வரலாறு என குறிப்பிட்ட அவர், உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் துரைமுருகன் எனவும் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, சிறு வயது முதல் திமுகவில் சிறப்பாக பணியாற்றி, கருணாநிதி மற்றும் எம் ஜி ஆரை தன் இரு கண்களை போல நேசித்தவர் துரைமுருகன் என தெரிவித்தார். இதனையடுத்து நீர்வளத்துரை அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

 

Tags :

Share via