இன்ஸ்டாகிராமில் மூழ்கிய சிறுவனை பெற்றோர் கண்டித்ததால் ஏற்பட்ட விபரீதம் - கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி சிறுவன்.

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம்-அய்யம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 15 வயது மகனான பொன்ராம் என்பவர் இருந்த நிலையில், இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பள்ளி சென்றவர் மாலை வீட்டிற்கு சென்று விட்டு வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் பல இடங்களில் சிறுவனை தேடியும் கிடைக்காததால் இதுதொடர்பாக சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்த நிலையில், தற்போது சிறுவன் உயிரிழந்த நிலையில் சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில், விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவன் பொன்ராமின் உடலை வீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, முதற்கட்ட விசாரணையில் சிறுவன் சமூக வலைதளமான instagram பக்கத்தில் அதிக அளவில் நேரத்தை செலவிட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததால் கோபத்தில் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையெனில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :