விவேக் மறைவுக்கு முதல்வர், ஸ்டாலின் இரங்கல்

by Editor / 17-04-2021 04:20:28pm
விவேக் மறைவுக்கு முதல்வர், ஸ்டாலின் இரங்கல்

 

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நடிகர் விவேக் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப் பெரிய இழப்பு" என்று  தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்:
சின்ன கலைவாணர்' என திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் நடிகர் விவேக். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். பல சாதனையை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்தவரை இயற்கை அவசரமாக ஏன் பறித்துகொண்டதோ? என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன், ரஜினிகாந்த்

அ.ம.மு.க. கட்சி தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 'சிவாஜி'படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
"சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த எனது தம்பி விவேக் நம்மோடு இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தான் வெளியிட்டுள்ள காணொளியில் நடிகர் சத்தியராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via