கள் இறக்க அனுமதி மறுப்பு - விவசாயிகள் போராட்டம்

by Editor / 26-04-2025 02:13:03pm
கள் இறக்க அனுமதி மறுப்பு - விவசாயிகள் போராட்டம்

பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கோரி, நேற்று கோவையில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கையில் கள்ளுடன் பங்கேற்றனர். கள் இறக்கும் விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் மீது பொய் வழக்குப் போடுவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், உடனடியாக கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். 

மேற்கு மண்டலத்தில் தென்னை சாகுபடி குறைந்துள்ளதால், கள் விற்பனைக்கு அனுமதித்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் தடை விதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய விவசாயிகள், தேங்காய் எண்ணெயை பொது விநியோகத் திட்டத்தில் வழங்கவும், பாமாயிலை தடை செய்யவும் வலியுறுத்தினர். மேலும், மது விற்பனையை அதிகரிப்பதற்காகவே தமிழக அரசு கள் விற்பனைக்கு அனுமதி மறுப்பதாகவும், எதிர்க்கட்சியாக இருந்தபோது கள்ளுக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய தலைவர் ஸ்டாலின் தற்போது அனுமதி மறுப்பது வேதனை அளிப்பதாகவும் விவசாயிகள் கூறினர்.

 

Tags :

Share via