முகநூலில் பெண் போல் பழகி டிரைவரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து  மோசடி.

by Editor / 19-11-2024 06:25:34pm
முகநூலில் பெண் போல் பழகி டிரைவரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து  மோசடி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கண்ணாரபேட்டை தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் வயது 36 லாரி டிரைவரான இவருக்கு முகநூல் முலம் சிரேயா என்கிற முகநூல் பக்கத்தில் அறிமுகமாகன நபர் தான் பெண் என்று கூறி தொடர்ந்து அவரிடம் சாட்டிங் செய்துள்ளார்.அப்போது ஆசை வார்த்தைகளை கூறியும் ஆபாசத்தை தூண்டும் வகையிலும் பேசி வந்துள்ளார். இதனால் மணிமாறன் சிரேயா என்கிற முகநூல் பக்கத்தில் இருப்பவர் பெண் தான் என நினைத்து தனது குடும்ப கஷ்டங்களையும் அவரிடம் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என அந்த பெண் கூறியதை நம்பி அவர் சொல்லும் 3 செல்போன் எண்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பல தவனையாக அனுப்பியுள்ளார். ஒரு நாள் அந்த பெண் பேசுவதில் சந்தேகம் அடைந்த மணிமாறன் அவர் பேசிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது செல்போனை எடுத்தவர் எனக்கு எந்த பெண்ணும் கிடையாது என கூறியதால் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்துள்ளது. 

இது குறித்து மணிமாறன் திருவாரூர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி முகநூலில் மோசடி செய்த நபரை தேடி வந்தனர்.இதில் செல்போன் எண்கள் மற்றும் பணம் சென்ற வங்கி கணக்குகளை ஆராய்ந்து பார்த்ததில் மோசடியில் ஈடுபட்டவர் அரியலூர் மாவட்டம் பெரியகிருஷ்ணாபுரம் ரெட்டிதத்தூர் காமராஜர் தெருவைச் சேர்ந்த பிரசாந்த்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அரியலுர் சென்று பிரசாந்த்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பிரசாந்த்குமார் டிப்ளமோ மெக்காளிக் இன்ஜினியர் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் டிரைவர் மணிமாறனை ஏமாற்றி 1 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறித்ததும் தெரியவந்தது.மேலும் இதே பாணியில் பல நபர்களிடம் செல்போனில் பெண்களை போல் பேசி ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்து ஏமாற்றி அவர்களிடம் ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ஆன்லைன் வழியே ஆள் மாறாட்டம் செய்வது பிறரை மோசடியாக நம்ப வைத்து பணம் பறிப்பது ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags : முகநூலில் பெண் போல் பழகி டிரைவரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து  மோசடி.

Share via
Logo