கோவில்பட்டியில் உயர்ரக கஞ்சா 24 கிலோ பறிமுதல். 6 பேர் கைது. கார் மற்றும் ஐ போன்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த மூப்பன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து ரீ பேக்கிங் செய்து சொகுசு கார்களில் கைமாற்றப்படுவதாக டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் முகாமிட்டு ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
மூப்பன்பட்டி சுடுகாடு அருகே போலீசாரை பார்த்ததும் சிலர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். போலீசார் துரத்தி சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் வள்ளுவர் நகரை சேர்ந்த அருண்குமார் (23), நாகலாபுரத்தை சேர்ந்த கொம்பையா (21), வ.உ.சி. நகரை சேர்ந்த கார்த்திக் (20) கயத்தாறு மகாராஜா (18) என்பதும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா டிராவல் பேக்குகளில் மூப்பன்பட்டி சுடுகாட்டு பகுதிக்கு கொண்டு வந்து அங்கு பதுக்கி வைத்திருந்து ரீ பேக்கிங் செய்து கார் மூலம் பிற பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கார் டிக்கியில் டிராவல் பேக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
இதே போல் கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் எஸ்.பி. ஸ்பெஷல் டீம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அய்யர் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாரதிநகரை சேர்ந்த கரன்குமார் (25), வ.உ.சி. நகரை சேர்ந்த சங்கர நாராயணன் (26) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்ட 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை கைது செய்திருந்த நிலையில் தற்போது 24 கிலோ கஞ்சாவையும் 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் கோவில்பட்டியில் 36 கிலோ வரை கஞ்சா பிடிபட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அருண்குமார் ஒடிசாவில் இருந்து 35 கிலோ கஞ்சா வாங்கிக் கொண்டு வந்து அதனைப் பிரித்து விற்பனை செய்து வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் கண்காணிக்க கஞ்சா கும்பல் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒடிசாவில் இருந்து எப்படி கஞ்சா கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இந்தக் கஞ்சா கும்பல் தங்களது தேவைகளுக்காக வறுமையில் இருக்கக்கூடிய சிறார்களை குறி வைத்து செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Tags : கோவில்பட்டியில் உயர்ரக கஞ்சா 24 கிலோ பறிமுதல். 6 பேர் கைது. கார் மற்றும் ஐ போன்கள் பறிமுதல்.