பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அதிகாரி உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதோடு எல்லை பகுதிகளை பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரபடுத்தியுள்ளது.
இதனிடையே நேற்று நடைபெற்ற அரசின் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தாப்பா பங்கேற்ற நிலையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதற்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவைகளின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று தான் அவர் மாவட்டத்தைச் சுற்றி துணை முதலமைச்சருடன் இருந்தார். நான் தலைமை தாங்கிய ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று அந்த அதிகாரியின் வீடு இருக்கும் ரஜௌரி நகரத்தை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எங்கள் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா கொல்லப்பட்டார். அவரது உயிரிழப்பால் தனக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Tags : பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அதிகாரி உயிரிழப்பு.