தூத்துக்குடிகாட்டுப்பகுதியில் கொலை : 7 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட குற்றவாளிகள்.

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியை பொன்னுச்சாமி (எ) குமார் என்பது தெரியவந்தது. கடந்த 7ஆண்டுகளாக இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி கொலையாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டார். தொடர்ந்து, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்லத்துரை, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் கார்த்திக் ராஜா, விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சரவணகுமார், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து, கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்ததன் விளைவாக விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (எ) கோடாங்கி கருப்பசாமி ,ராஜராஜன், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமியை கொலை செய்ததை இவர்கள் ஒப்புக் கொண்டனர்.
மேற்படி கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப ரீதியாகவும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
Tags : தூத்துக்குடிகாட்டுப்பகுதியில் கொலை : 7 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட குற்றவாளிகள்.