2026 மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் திராவிட மாடல் ஆட்சியே நிலைத்து நிற்கும்-முதல்வர் ஸ்டாலின் உறுதி.

ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது முறையாக மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முதலில், உதகையில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சி குறித்து பேசுகையில், "மலர்க் கண்காட்சி மிகச் சிறப்பாக இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட மிகவும் நன்றாக இருந்தது" என்று பாராட்டினார்.
பின்னர், தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் மத்திய அரசு விளக்கம் கேட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர், "இந்த விவகாரம் குறித்து பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநில தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும், "மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளதாக கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது அவருடைய தனிப்பட்ட கருத்து" என்று முதல்வர் பதிலளித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "2026 மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் திராவிட மாடல் ஆட்சியே நிலைத்து நிற்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
Tags : 2026 மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் திராவிட மாடல் ஆட்சியே நிலைத்து நிற்கும்-முதல்வர் ஸ்டாலின் உறுதி.