தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு:தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா.

தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவல் வருமாறு:தகவல்.
தென்மேற்குப் பருவக்காற்று என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இன்றியமையாத மழை பருவமாகும். தமிழகத்தை தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தென்மேற்கு பருவமழை காலத்திலேயே மழை பெறுகிறது. எனவே நமது இந்திய நாட்டின் ஒட்டுமொத்த நீர்தேவையும் தென்மேற்கு பருவமழையை நம்பியே இருக்கிறது.
வடக்கு மற்றும் மத்திய இந்திய துணைக் கண்டத்தின் தார் பாலைவனம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் வெப்பமான கோடைகாலங்களில் கணிசமாக வெப்பமடைகின்றன.
இது வடக்கு மற்றும் மத்திய இந்திய துணைக் கண்டத்தின் மீது குறைந்த அழுத்தப் பகுதியை ஏற்படுத்துகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பகுதிலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் சராரியாக ஜுன் 1 ம்தேதி துவங்குகிறது. தென்மேற்கு பருவமழையின் அரேபிய கடல் கிளை முதலில் இந்தியாவின் கடலோர மாநிலமான கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்குகிறது.இதனால் இந்த பகுதி தென்மேற்கு பருவமழையில் மழை பெறும் இந்தியாவின் முதல் மாநிலமாக திகழ்கிறது.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முக்குருத்தி தேவாலா அவலாஞ்சி பந்தலூர் கோவை மாவட்டம் சின்னகல்லாறு ஆகிய இடங்கள் தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெறும் பகுதிகளாகும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்தியாவிலேயே மிக குறைவான மழையை பெறும் பகுதி தூத்துக்குடி. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகள் சராசரியாக 30 மிமீ மழை மட்டுமே பெறுகிறது.தூத்துக்குடி இந்தியாவின் வறண்ட இடமாக கருதப்படுகிறது.
இந்தாண்டு வானிலை அமைப்பை பொறுத்தவரை நடுநிலை லாநினோ மற்றும் நடுநிலை இருமுனை நிகழ்வு தொடர்கிறது. எனவே இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் இயல்பான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி நீலகிரி தென்காசி தேனி மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழை பெற வாய்ப்புள்ளது. அதே போல நாங்குநேரி அம்பாசமுத்திரம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் கொடைக்கானல் உத்தமபாளையம் வால்பாறை பொள்ளாச்சி ஆகிய 9 தாலுகா இயல்பை விட அதிகமழையை பெற வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. பொதுவாக பெரும் மழையை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைகளால் தடைபடுவதால் தமிழகத்திற்கு மழை கிடைப்பது இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக குறைவான மழையை பெறுகிறது சராசரியாக இம்மாநிலம் 329 மிமீ மழையை பெறுகிறது.
மழை மறைவு பிரதேசமான தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டின் சராசரி மழைப்பொழிவான 46 % மழை வடகிழக்கு பருவமழை வாயிலாகவே பெறுகிறது ஆனாலும் தமிழகத்தை வளம் கொழிக்க செய்யும் காவிரி, வைகை, பவானி, மனிமுத்தாறு தாமிரபரணி போன்ற எண்ணற்ற நதிகளின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலையாக உள்ளது எனவே தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இயல்பை விட அதிகம் தென்மேற்கு பருவ மழை பெய்தால் தமிழகமே வளமாக இருக்கும்.
கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மழை எப்போது குறைகிறதோ அப்போது தமிழகத்தின் பிற மாவட்டங்கள் வெப்பசலன மழையால் மழை பொழியும்.
தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருப்பத்தூர் இராணிப்பேட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இந்தாண்டு வெப்பசலன மழை இயல்பை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆனால் உள் மாவட்டங்களான விருதுநகர் மதுரை கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு. தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை ஏற்படும் . தென்மேற்கு பருவமழை கன்னியாகுமரி தென்காசியில் தீவிரமாக இருக்கும் நாட்களில் தூத்துக்குடி நெல்லை கிழக்கு பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மற்றபடி ஜூன் ஜூலை மாதங்களில் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் மலைப்பகுதி தவிர பிற இடங்களில் பெரிய அளவு மழை பெய்யாது.
தென் மேற்கு பருவமழை காலத்தில் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக குமரி நீலகிரி கோவை மாவட்டங்களில் அணைகளை நிரப்பும் அளவிற்கு நல்ல மழை பெய்யும். மேலும் பாபநாசம் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தாலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த அணைகள் நிரம்ப வாய்ப்பில்லை. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படாது.
இந்தியாவின் வளர்ச்சி வறட்சி மற்றும் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் தென்மேற்கு பருவமழையை நாம் வரவேற்க தயாராக இருப்போம்.என தெரிவித்துள்ளார்.
Tags : தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு