பஸ் கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு

கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(29). தனியார் பஸ் கண்டக்டர். இவர் தினமும் பஸ்சை திருச்சி ரோடு ரெயின்போ பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே பார்க்கிங் செய்வது வழக்கம்.
இதேபோல், நேற்று பெட்ரோல் பங்க் அருகே பஸ்சை சுத்தம் செய்து விட்டு ஹரிகிருஷ்ணன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கவுண்டம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த மனோஜ்(24) என்பவர், பஸ்சை இங்கு நிறுத்தக்கூடாது, இந்த இடத்தில் நான் ஆம்புலன்சை பார்க்கிங் செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ் அரிவாளால் ஹரிகிருஷ்ணனை வெட்ட முயன்றார்.
இதனை ஹரிகிருஷ்ணன் தடுத்ததில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஹரிகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் மனோஜை கைது செய்தனர்.
Tags :