கோவையில் ISIS அமைப்பிற்கு ஆள் சேர்த்த கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது. .

தமிழ்நாட்டில் ISIS அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து NIA பல்வேறு கண்காணிப்புபனைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கோவையில் ISIS அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக NIA ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் , கோவை அரபிக் கல்லூரியின் முதல்வராக இருக்கும் அகமது அலி மற்றும் அந்தக் கல்லூரியின் ஊழியர் ஜவஹர் சாதிக் ஆகிய இருவர் உட்பட 4 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி நடந்தது. இந்த கார்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையின் பொழுது, கோவை குனியமுத்தூர் அரபிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை மூளை சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு அனுப்ப முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஜமீல் பாஷா, முகமது உசேன் இஸ்ரத், சையது அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக ஜவஹர் சாதிக், அகமது அலி என்ற இருவரை பிடித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள NIA அலுவலகத்தில் இந்த விசாரணையானது நடைபெற்று வந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அகமது அலி கோவை அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறார்.ஜவகர் சாதிக் அரபிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள்இருவரையும் இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளனர். இதே போல திருச்சியில் அரபு கல்லூரியை நிர்வகித்து வரும் ஷேக் தாவூத் என்பவரையும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜா அப்துல்லா என்பவரையும் இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து இந்த வழக்கில் கைது எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட கோவையை சேர்ந்த இருவர் உட்பட 4 பேரையும் சென்னை அழைத்துச் சென்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : கோவையில் ISIS அமைப்பிற்கு ஆள் சேர்த்த கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது. .