போதைப்பொருள் விவகாரம்:நடிகர் கிருஷ்ணாவிடம் காவல்துறையினர் விசாரணை.

போதைப் பொருளை பயன்புடத்தியது தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்துக்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைதானார்.
தொடர்ந்து இயக்குநர் விஷ்ணு வர்தனின் சகோதரரும், கழுகு பட நடிகருமான கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் கேரளாவில் தலைமறைவானதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதனிடையே, காவல்நிலையத்தில் ஆஜரான கிருஷ்ணாவை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையானது தொடர்ந்து 17 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் கிருஷ்ணாவின் வங்கி பணப்பரிவர்த்தனை, செல்போன் எண்களில் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை குறித்தும் அதிமுக நிர்வாகி குறித்தும் பல்வேறு கேள்விகளை காவல்துறையினர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான மருத்துவ பரிசோதனையில் நடிகர் கிருஷ்ணா போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என முதல்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா? அல்லது விசாரணை முடிந்து அனுப்பி வைக்கப்படுவாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. கிருஷ்ணா அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் கோலிவுட்டில் பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : போதைப்பொருள் விவகாரம்:நடிகர் கிருஷ்ணாவிடம் காவல்துறையினர் விசாரணை.