ரவுடி மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு: சிக்கியவருக்கு தர்ம அடி!
சென்னை சூளைமேட்டில் ரவுடி மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு நமச்சிவாய புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற எலி கார்த்திக் (27). சூளைமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரம் சமயபுரத்தம்மன் கோயில் அருகில் உள்ள சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார்.
இன்று எலி கார்த்திக் கடை அருகில் நின்றிருந்த போது 2 பேர் அங்கு வந்து பெட்ரோல் வெடிகுண்டை வீசினர். ஆனால் எதிர்பாரதவிதமாக எலி கார்த்திக் மீது படவில்லை. அருகில் நின்றிருந்த கார் மீது விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை. காருக்கும் சேதமில்லை.
பெட்ரோல் குண்டை வீசிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது நடந்த சென்ற ஒருவரின் செல்போனை 2 பேரும் பறித்த போது பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதானவர்கள் சூளைமேடு நமச்சிவாயபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த காதா சாம்ராஜ், சூளைமேடு ஜெயலட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பது தெரிந்தது. இதில் காதா சாம்ராஜ் மீது ஒரு கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு உள்ளது என்பது தெரிந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காதா சாம்ராஜ், ஸ்ரீராம் ஆகிய இருவரும் எலி கார்த்திக் ஏரியாவுக்கு சென்றனர். அப்போது "இது எங்க ஏரியா, நான் சொன்னபடி தான் கேட்கனும்" என கூறி மது பாட்டிலை உடைத்து எலி கார்த்திக் 2 பேரையும் குத்த முயன்றதாக தெரிகிறது
. இதனால் காதா சாம்ராஜ், ஸ்ரீராம் இருவரும் பெட்ரோல் வாங்கி வந்து மதுபாட்டிலில் நிரப்பி எலி கார்த்திக் மீது வீசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் வெடிகுண்டு விழுந்த காரின் உரிமையாளர் ஜெகதீஸ்வரன். அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர். ஜெகதீஸ்வரன் இது தொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் காதா சாம்ராஜ், ஸ்ரீராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்போனை பறி கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த மதுசூதன ரெட்டி கொடுத்த புகாரின் பேரிலும் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :