மேகதாது விவகாரத்தில் தி.மு.க-அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் யாராலும் வீழ்த்த முடியாது- துரைமுருகன் பேச்சு

by Admin / 27-08-2021 04:23:37pm
மேகதாது விவகாரத்தில் தி.மு.க-அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் யாராலும் வீழ்த்த முடியாது- துரைமுருகன் பேச்சு

 

கர்நாடக மாநிலத்தில் யார் ஆட்சி மாறினாலும் கட்சி வித்தியாசமின்றி ஒரே மாதிரியாகத் தான் பேசுவார்கள். அதில் வித்தியாசமே இருக்காது. அதுபோல் கேரளாவிலும் வித்தியாசம் இருக்காது.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது.

சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் செல்வபெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), எம்.ஆர்.காந்தி (பா.ஜனதா), ஜி.கே.மணி (பா.ம.க.), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி), சதன்திருமலைகுமார் (ம.தி.மு.க.) ஆகியோர் பேசினார்கள்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை அப்போது விளக்கி கூறினார்கள். இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “காவிரி பிரச்சினையில் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்தார். அதற்கு பிறகும் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கவும் அதை முறைப்படுத்த குழு அமைக்கவும் வலியுறுத்தினார். உச்சநீதிமன்றம் வரை சென்றார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இப்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொள்கிறது.

இந்த அணை கட்டினால் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்சினையில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

அனைத்துக்கட்சியும் இதில் ஒரே கருத்தில்தான் உள்ளோம். முதல்-அமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். டெல்லி சென்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், நீர் வளத்துறை மந்திரியை சந்தித்து இதை வலியுறுத்தி இருக்கிறோம்.

இதற்கு பிறகும் கர்நாடகா ஏதேச்சை அதிகாரமாக இந்திய அரசிலமைப்பு சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறது. இதை அனைவரும் கடுமையாக எதிர்க்கிறோம். கண்டிக்கிறோம்.

எனவே இந்த வி‌ஷயத்தில் முதல்-அமைச்சர் மீண்டும் அனைத்துக்கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசியதாவது:-

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி எடுப்பது பற்றி பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் பல்வேறு கட்சி தலைவர்கள் இங்கு கருத்துகளை தெரிவித்தனர்.

இன்று கட்சி வித்தியாசம் இல்லாமல் நாம் எப்படி  ஒற்றுமையாக இருக்கிறோமோ அப்படி இறுதிவரை இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினையில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியை தெரிவிக்கிறேன்.

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆதங்கம். கர்நாடக மாநிலத்தில் யார் ஆட்சி மாறினாலும் கட்சி வித்தியாசமின்றி ஒரே மாதிரியாகத் தான் பேசுவார்கள். அதில் வித்தியாசமே இருக்காது. அதுபோல் கேரளாவிலும் வித்தியாசம் இருக்காது.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் வித்தியாசம் காணப்பட்டது. அதெல்லாம் இப்போது மறைந்து விட்டது. இப்போது சுமூக உணர்வு ஏற்பட்டுள்ளது.

மற்ற பிரச்சினைகளில் வித்தியாசம் இருந்தாலும் இந்த பிரச்சினையை பொறுத்தவரையில் செங்கோட்டையன் சொன்னது போல் இருமொழி கொள்கையிலும், இந்தியை எதிர்ப்பதிலும், காவிரி பிரச்சினையிலும் நாம் ஒன்றுபட்டு இருப்போமானால் எந்த சக்தியும் தமிழகத்தை வீழ்த்த முடியாது என்பது என்னுடைய வாதம்.

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாகத்தான் உள்ளோம். இதற்காக முதல்-அமைச்சர், பிரதமரையும் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். என்னையும் அப்போது அழைத்து சென்றார். அதன் பிறகு மத்திய நீர்வளத்துறை மந்திரியை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சென்று பார்த்து வந்தோம்.

அவர்களும் நம்மிடம் உறுதிமொழி கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த வாரம் காவிரி ஆணைய குழு கூடுகிறது. அங்கே இந்த பிரச்சினை குறித்து கர்நாடகா விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து அங்கு பேச முடியாது. பேசக்கூடாது என்பது தமிழ்நாட்டின் திட்டவட்ட கொள்கையாகும்.

எனவே எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டின் கொள்கையை திட்டவட்டமாக எடுத்து வைப்போம். எதை மறுக்க வேண்டுமோ அதை மறுப்போம். வாதாடி வேண்டிய இடத்தில் வாதாடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via