இந்தியாவில் எந்த ஊடுருவலும் இல்லை... ராஜ்நாத்சிங் பெருமிதம்...
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுறுவலும் நடைபெறவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் இந்திய கடற்படையால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை துறைமுகத்தில் இன்று ‘விக்ரஹா ரோந்து கப்பல்’ சேவை துவக்க விழா நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று இந்திய பாதுகாப்பு பணிக்காக 7 ஆவது கப்பலை அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடற்படை ஜெனரல் எம்.எம்.நரவனே, டைரக்டர் ஜெனரல் கே.நடராஜன், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
எல்&டி உடன் நிறுவனம் இந்திய கடற்படைக்கு பாதுகாப்பு பணி மற்றும் பேரிடர் மீட்பு காலங்களில் பயன்படுத்திகொள்ளும் வகையில் 7 கப்பலைகளை தயாரித்து கொடுப்பதாக ஒப்பந்தத்தில் உள்ளது. அதன்படி ஏற்கெனவே ஐசிஜிஎஸ் 'விக்ரம்', ஐசிஜிஎஸ் 'விஜயா' ஐசிஜிஎஸ் 'வீரா', ஐசிஜிஎஸ் 'வராஹா', ஐசிஜிஎஸ் 'வரத்', ஐசிஜிஎஸ் 'வஜ்ரா' ஆகிய 6 ரோந்து கப்பல்கள் இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி மற்றும் 7வது கப்பலாக விக்ரஹா இன்று ஒப்படைக்கப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
இந்திய தொழில்நுட்பத்துடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த கப்பல் கட்டுமானம் நடைபெற்றுள்ளது என்பது மிகப்பெருமையாக உள்ளது என்றும், இந்த கப்பல் கடலோர காவல்படையில் சேர்வதன் மூலம் இந்திய கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்ற அவர், இதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களை காக்க முடியும் என்றும் கூறினார்.
மும்பை தாக்குதலுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டுக்கு பிறகு கடல் வழியாக இந்தியாவிற்குள் எந்தவொரு தீவிரவாத ஊடுறுவலும் நடைபெறவில்லை என்றும், அந்தளவுக்கு இந்திய கடலோர காவல்படை நமது கடற்பகுதியை பாதுகாத்து வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் இந்திய கடற்படையால் மீட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், உலக அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு அளவிற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் நாம் அதிகமான ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் கூறினார்.
விக்ரஹா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பல் கடலோர காவல் படையின் கிழக்கு பகுதி தளபதியின் கட்டுப்பாட்டில் கிழக்கு கடல் பகுதியில் பணியாற்றும். 98 மீட்டர் நீளமுள்ள ரோந்து கப்பலில் 11 அதிகாரிகள் உடன் 110 மாலுமிகள் இருப்பார்கள். இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த கப்பலானது லார்சன் & டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நவீன தொழில்நுட்ப ராடார்கள், தொலைத்தொடர்பு மற்றும் பயண கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரு 40/60 போஃபோர்ஸ் துப்பாக்கி, இரண்டு 12.7 மி.மீ ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் போன்றவற்றை கொண்டிருக்கும். ஒரு ஹெலிகாப்டர் மற்றும் நான்கு அதிவேக படகுகள் ஆகியவற்றை சுமந்து செல்லும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த நிகழ்ச்சியில் இந்த விக்ரஹா கப்பலுடன் சேர்த்து 157 கப்பல்கள் மற்றும் 66 விமானங்கள் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கபட்டது.
Tags :